Thursday, February 27, 2014

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்


http://www.cict.in/index.php

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனம். இஃது உலகளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்றுள்ள உயராய்வு நிறுவனமாகும். இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது. இதற்கு முன் 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகுணரச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் - Project Madhurai



http://www.projectmadurai.org/pmworks.html

இது ஒரு உலகளாவிய முயற்சி. தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.


இலக்கியங்கள்தான் எந்த ஒரு சமூகத்திற்கும் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.


மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.


மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்.


தமிழ் இலக்கியக்களின் வரலாறு மிக பழமையானது. முதற் சங்க கால நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம்; சமயம்; தேசப்பிரிவு; இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்ட சங்க கால நூல்கள்முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்களுக்கான காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது. காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். காப்புரிமை உள்ள கடந்த நூற்றாண்டு, தற்கால நூல்களுக்கு காப்புரிமை கொண்டோரின் அனுமதி தேவை.


மதுரைத் திட்டத்தைப் பற்றி மற்ற விவரங்களையும் தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களையும் இந்த இணைய தளத்தின் பக்கங்கள் மூலமாக இலவசமாக பெறலாம். மதுரைத் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் மின்னஞ்சல் மூலமாக மதுரைத் திட்ட தலைவருடன் kalyan@geocities.com & kumar@vt.edu தொடர்பு கொள்ளவும்.


(http://www.projectmadurai.org/ இனைய பக்கத்தில் இருந்து தொகுக்கப் பட்டது )

Friday, February 7, 2014

நன்றி சொல்லுங்கள் - நன்றியோடு சொல்லுங்கள்.

நாவிலிருந்து நெக்கித் தள்ளும் 'Thanks' எங்கே,
உளம் மகிழ்ந்து நாம் சொல்லும் 'நன்றி' எங்கே?

'Thanks' - சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா?

நன்றி சொல்வதில் எதற்கு அத்தனை சோம்பேறித்தனம்? நிறைவாக 'நன்றி' என்றே சொல்லலாமே!

நன்றி சொல்லுங்கள் - நட்பு வளரும்.

நன்றியோடு சொல்லுங்கள் - அன்பு வளரும். 

Thursday, February 6, 2014

என்ன, தமிழ் அழிந்து வருகிறதா?

என்ன, தமிழ் அழிந்து வருகிறதா?

இல்லை என்று சொல்ல மனம் விரும்பினாலும், 'ஆம்' என்பதே உண்மையாகும்.  பல லட்சம் மக்கள் தமிழ் மொழியைப் பேசுகின்றனர். ஆனால் பிற மொழி கலப்பில்லாமல் பேசுபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.

இந்த பிற மொழி கலப்பினால், அதிலும் ஆங்கிலக் கலப்பினால் உண்டாகும் (உண்டான) அபாயம் மிக எளிதில் புலப்படுவது இல்லை.

உதாரணமாக, நம்மில் எத்தனை பேர், தமக்கு ஒருவர் செய்த உதவிக்காக தமிழில் நன்றி சொல்கிறோம்? ' Thanks' என்று எளிதாய் சொல்லிவிட்டு இயல்பாய் சிரிக்கின்றோம்.

இன்று நாம் சொல்லும் இதே 'Thanks'ஐ தன்  நம் குழந்தைகள் கேட்கின்றனர். அவர்களின் மனதில் அதுவே ஆழப் பதிந்து வழக்கமாக மாறுகின்றது.

மேடைப் பேச்சாளர்களும், செய்தி வாசிப்பாளர்களும், சேவை மைய ஊழியர்களும் மட்டுமே 'நன்றி' என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனர்.

'நன்றி' என்று தமிழில் சொன்னால் ஏதோ நாடக நடிகனைப் பார்ப்பது போல் பார்கின்றது இந்த உலகம்.

நாளடைவில் இந்த சொல் எங்கோ ஓரிரு கிராமங்களில் மட்டுமே கேட்க இயலும் போல் இருக்கின்றது.

அடுத்த தலைமுறைக்கு அது ஒரு தமிழ் வார்த்தையாய் மட்டும் தெரியுமே தவிர அதன் அர்த்தம் தெரியாது. இந்த ஒரு வார்த்தைப் போல இன்னும் பல இனிய தமிழ் சொற்கள் கேட்கக் கிடைக்காமல் போய்விடும்.

அவர்களுக்கும் அடுத்து வரும் தலைமுறைக்கு அவை தமிழ் சொற்கள் என்பதே தெரியாமல் போகும்.

அதன் பின் வரும் தலைமுறைகளுக்கு 'தமிழ்' என்ற சொல் கூட அடையாளம் தெரியாமல் போய்விடும்.

பனை ஓலைகளில் பதியப்பட்டும் பாழாகாமல் படர்ந்தோளிர்ந்த நம் தமிழ் மொழி, இன்று மேகக்-கணிமை (cloud computing) காலத்தில் புறந்தள்ளப் படுகிறது.


இரண்டாயிரம் ஆண்டுகளாக இலக்கண வரைமுறைகளோடும் , எண்ணிலடங்கா இலக்கியங்களோடும்  எதற்கும் கலங்காமல் செழிதெழுந்த நம் தாய்மொழி, இருநூறு ஆண்டு கால ஆங்கில மோகத்தால் அவமதிக்கப் பட்டு வருகின்றது.


மனம் வருந்தி, உயிர் பதைக்க, நா கசக்க சொன்னாலும், இது உண்மையே. தமிழ், தன்னிகரற்ற தமிழ், அழிந்து கொண்டுதான் வருகிறது.