Thursday, February 27, 2014

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் - Project Madhurai



http://www.projectmadurai.org/pmworks.html

இது ஒரு உலகளாவிய முயற்சி. தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.


இலக்கியங்கள்தான் எந்த ஒரு சமூகத்திற்கும் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.


மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.


மதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்.


தமிழ் இலக்கியக்களின் வரலாறு மிக பழமையானது. முதற் சங்க கால நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம்; சமயம்; தேசப்பிரிவு; இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. தொன்றுதொட்ட சங்க கால நூல்கள்முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்களுக்கான காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது. காப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். காப்புரிமை உள்ள கடந்த நூற்றாண்டு, தற்கால நூல்களுக்கு காப்புரிமை கொண்டோரின் அனுமதி தேவை.


மதுரைத் திட்டத்தைப் பற்றி மற்ற விவரங்களையும் தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களையும் இந்த இணைய தளத்தின் பக்கங்கள் மூலமாக இலவசமாக பெறலாம். மதுரைத் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் மின்னஞ்சல் மூலமாக மதுரைத் திட்ட தலைவருடன் kalyan@geocities.com & kumar@vt.edu தொடர்பு கொள்ளவும்.


(http://www.projectmadurai.org/ இனைய பக்கத்தில் இருந்து தொகுக்கப் பட்டது )

No comments:

Post a Comment