Thursday, February 6, 2014

என்ன, தமிழ் அழிந்து வருகிறதா?

என்ன, தமிழ் அழிந்து வருகிறதா?

இல்லை என்று சொல்ல மனம் விரும்பினாலும், 'ஆம்' என்பதே உண்மையாகும்.  பல லட்சம் மக்கள் தமிழ் மொழியைப் பேசுகின்றனர். ஆனால் பிற மொழி கலப்பில்லாமல் பேசுபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.

இந்த பிற மொழி கலப்பினால், அதிலும் ஆங்கிலக் கலப்பினால் உண்டாகும் (உண்டான) அபாயம் மிக எளிதில் புலப்படுவது இல்லை.

உதாரணமாக, நம்மில் எத்தனை பேர், தமக்கு ஒருவர் செய்த உதவிக்காக தமிழில் நன்றி சொல்கிறோம்? ' Thanks' என்று எளிதாய் சொல்லிவிட்டு இயல்பாய் சிரிக்கின்றோம்.

இன்று நாம் சொல்லும் இதே 'Thanks'ஐ தன்  நம் குழந்தைகள் கேட்கின்றனர். அவர்களின் மனதில் அதுவே ஆழப் பதிந்து வழக்கமாக மாறுகின்றது.

மேடைப் பேச்சாளர்களும், செய்தி வாசிப்பாளர்களும், சேவை மைய ஊழியர்களும் மட்டுமே 'நன்றி' என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனர்.

'நன்றி' என்று தமிழில் சொன்னால் ஏதோ நாடக நடிகனைப் பார்ப்பது போல் பார்கின்றது இந்த உலகம்.

நாளடைவில் இந்த சொல் எங்கோ ஓரிரு கிராமங்களில் மட்டுமே கேட்க இயலும் போல் இருக்கின்றது.

அடுத்த தலைமுறைக்கு அது ஒரு தமிழ் வார்த்தையாய் மட்டும் தெரியுமே தவிர அதன் அர்த்தம் தெரியாது. இந்த ஒரு வார்த்தைப் போல இன்னும் பல இனிய தமிழ் சொற்கள் கேட்கக் கிடைக்காமல் போய்விடும்.

அவர்களுக்கும் அடுத்து வரும் தலைமுறைக்கு அவை தமிழ் சொற்கள் என்பதே தெரியாமல் போகும்.

அதன் பின் வரும் தலைமுறைகளுக்கு 'தமிழ்' என்ற சொல் கூட அடையாளம் தெரியாமல் போய்விடும்.

பனை ஓலைகளில் பதியப்பட்டும் பாழாகாமல் படர்ந்தோளிர்ந்த நம் தமிழ் மொழி, இன்று மேகக்-கணிமை (cloud computing) காலத்தில் புறந்தள்ளப் படுகிறது.


இரண்டாயிரம் ஆண்டுகளாக இலக்கண வரைமுறைகளோடும் , எண்ணிலடங்கா இலக்கியங்களோடும்  எதற்கும் கலங்காமல் செழிதெழுந்த நம் தாய்மொழி, இருநூறு ஆண்டு கால ஆங்கில மோகத்தால் அவமதிக்கப் பட்டு வருகின்றது.


மனம் வருந்தி, உயிர் பதைக்க, நா கசக்க சொன்னாலும், இது உண்மையே. தமிழ், தன்னிகரற்ற தமிழ், அழிந்து கொண்டுதான் வருகிறது.


1 comment:

  1. திருத்தங்கள் செய்து உதவிய ஷாஜஹான் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete